தூத்துக்குடியில் 24 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல்
தூத்துக்குடியில் 24 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 24 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர்.
ரோந்து
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தாளமுத்துநகர் கே.வி.கே.சாமி நகர் பகுதியில் தனியார் குடோனில் ஒரு டேங்கர் லாரியில் இருந்து 5 பேர் டீசலை இறக்கிக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் அந்த லாரியை போலீசார் சோதனையிட்ட போது, அதில் கலப்பட டீசல் இருந்தது தெரியவந்தது.
கலப்பட டீசல்
இதையடுத்து அந்த லாரியில் இருந்த 24 ஆயிரத்து 200 லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த டீசல் தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மொத்த டீசலின் மதிப்பு ரூ.20 லட்சம் என்று கூறப்படுகிறது. இதனை தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக லாரி உரிமையாளர் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.