கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கோவையில் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல்
கோவை
கோவையில் தற்போது 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இதையடுத்து வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெங்கு காய்ச்சல்
கோவை மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதில், பெரியநெகமம், சின்னவேடம்பட்டி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு 2 சிறுவர்கள் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாநகராட்சி பகுதியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதார துறை சார்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி மற்றும் ஊரக சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது
வீடு வீடாக ஆய்வு
கோவையில் தற்போது மழை ஓய்ந்து வெயில் அடித்து வருகிறது. இதனால் தேங்கி நிற்கும் மழைதண்ணீரில் கொசுக்கள் வேகமாக உற்பத்தி ஆகும்.
இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து உள்ளது. மாநகராட்சியில் 21 பேர், ஊரக பகுதியில் 6 பேர் என மொத்தம் 27 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையொட்டி டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோவை மாநக ராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணியில் 800 பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
தற்போது காய்ச்சல் அதிகரித்து வருவதால் கூடுதலாக 200 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஆய்வு செய்வார்கள்.
அபராதம் விதிப்பு
அப்போது அங்கு தண்ணீர் தேங்கி இருந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கிறார்கள். மேலும் கொசுப்புழுக்களை அழிக்க அபேட் எனும் மருந்து ஊற்றுகின்றனர்.
வீடுகள், கல்வி நிலையங்கள், வர்த்தக நிறுவனங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததற்காக இதுவரை ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
ஊரக பகுதிகளில் ஊராட்சிக்கு 2 பேர் வீதமும், பேரூராட்சி பகுதி யில் 10 பேர் வீதமும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
அதோடு வீடு, வீடாக ஆய்வு செய்து பழைய பொருட்களில் தண்ணீர் புகாதவாறு வைக்க அறிவுறுத்துகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.