மாங்காட்டில் 250 வீட்டு உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீசு
மாங்காட்டில் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 250 வீட்டு உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் நோட்டீசு வழங்கினர்.;
மாங்காடு சுற்றுவட்டார பகுதிகள்
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக சென்னை புறநகர் பகுதியில் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியது. குறிப்பாக மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சீனிவாசா நகர், ஜனனி நகர், ஓம் சக்தி நகர், அப்பாவு நகர், செல்வ கணபதி நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது.
இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதிபட்டு வந்தனர். ஒவ்வொரு மழைக்காலங்களிலும் இப்பகுதி பொதுமக்களுக்கு இதே நிலை தான் தொடர்ந்தது.
வருவாய் துறையினர் நோட்டீசு
இதனால் இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து தனி வட்டாட்சியர் காஞ்சனாமாலா சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
மேலும் மழைநீர் வெளியேறாமல் குடியிருப்புகளில் தேங்குவதற்கு என்ன காரணம் என்று வருவாய் துறையினர் சார்பில் ஆராயப்பட்டது. இதில் சிறிய, பெரிய அளவில் சுமார் 250 வீடுகள் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால் அந்த கட்டிட உரிமையாளர்களுக்கு வருவாய் துறையினர் சார்பில் கடந்த சில தினங்களாக நோட்டீஸ் வழங்கி 21 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்குள் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே முன் வந்து தங்களது கட்டிடங்களை அகற்ற வேண்டும்.
எச்சரிக்கை
தவறும் பட்சத்தில் வருவாய் துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவார்கள் என்று கடுமையான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதன் மூலம் வரும் மழைக்காலங்களில் மழைநீர் வடிகால்வாய் வழியாக எளிதில் வெளியேறும். இதன் மூலம் குடியிருப்புகளை சுற்றிலும் மழைநீர் தேங்குவது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். வருவாய் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கையால் தற்போது ஆக்கிரமிப்பாளர்கள் அச்சத்தில் உள்ளனர்.