திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி சாமி தரிசனம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கவர்னர் ஆர் என் ரவி, சாமி தரிசனம் செய்தார்.

Update: 2021-12-14 11:51 GMT
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி, சாமி தரிசனம் செய்தார். இன்று நெல்லை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
கவர்னர் சுற்றுப்பயணம்
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதற்காக நேற்று முன்தினம் காலை விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் தனது மனைவி லட்சுமியுடன் எட்டயபுரத்திற்கு காரில் சென்றார். அங்கு சுதந்திர போராட்ட வீரர் மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாலையில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்திற்கு சென்றார். அங்கு துறைமுகத்தை இழுவை கப்பலில் சென்று பார்வையிட்டனர். பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமியுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். அங்குள்ள கோவில் விருந்தினர் மாளிகையில் தங்கினார்.
சாமி தரிசனம்
நேற்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமியுடன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார். அவருக்கு, சண்முகவிலாச மண்டபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்குள் மனைவியுடன் சென்ற அவர் மூலவர், சண்முகர், பெருமாள், சூரசம்ஹார மூர்த்தி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.
அவருடன் திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை, ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனரும், தக்கார் பிரதிநிதியுமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் சென்றனர்.
கவர்னர் வருகையையொட்டி நேற்று முன்தினம் மாலையில் இருந்து நேற்று காலை கவர்னர் செல்லும் வரை திருச்செந்தூர் டி.பி. ரோடு, கோவில் வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் மேற்பார்வையில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இஸ்ரோ மையம்
திருச்செந்தூர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு நேற்று காலை கவர்னர் ஆர்.என்.ரவி நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்றார். அங்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, கவர்னரை வரவேற்றார்.
இஸ்ரோ மையத்தில் ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக தயாரிக்கப்படும் எந்திரங்கள் குறித்து விஞ்ஞானிகள், கவர்னருக்கு விளக்கம் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மதியம் கவர்னர் ஆர்.என்.ரவி கார் மூலம் நெல்லைக்கு வந்தார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு அவர் சென்றார். அங்கு துணைவேந்தர் பிச்சுமணி, கவர்னரை வரவேற்றார். அப்போது மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கலந்துரையாடல்
இதைத்தொடர்ந்து முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர் ஆகியோருடன் கலந்துரையாடினார். மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பல்வேறு துறை அலுவலகங்கள், சூரியசக்தி மின் நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டார். இதையடுத்து கூட்ட அரங்கில் பல்கலைக்கழக கல்வி வளர்ச்சி குறித்து துணைவேந்தர் பிச்சுமணி, ஒளி-ஒலி காட்சி மூலம் விளக்கினார். பின்னர் கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடினார்.
நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு பல்கலைக்கழக மாளிகையில் தங்கினார்.
இன்று பட்டமளிப்பு விழா
இன்று (புதன்கிழமை) காலையில் கவர்னர் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். காலை 10 மணியளவில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 1,243 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார்.
விழா முடிந்ததும் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்.
.........................
(பாக்ஸ்) இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு
நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, மனைவி லட்சுமியுடன் சென்றார். அந்த மைய இயக்குனர் அழகுவேல், கவர்னரை வரவேற்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆராய்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
அப்போது கவர்னர், அங்குள்ள விஞ்ஞானிகளை வாழ்த்தினார். விண்வெளியில் விஞ்ஞானிகள் தங்களது பங்களிப்பு மூலம் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கிறார்கள் என்று பாராட்டினார். விக்ரம் சாராபாய் போன்றவர்களின் தொலைநோக்கு பார்வை இந்தியாவை  விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னேற்றி மனித குலத்துக்கு மிகப்பெரிய பங்களிப்பை தந்துள்ளது. இஸ்ரோவின் அர்ப்பணிப்பு, பணி, கலாசாரம் ஆகியவை தனியார் துறை உள்பட மற்ற அனைவரும் பொறாமைப்படும் வகையில் உள்ளது. விண்வெளி துறையில் இந்தியாவை முதன்மையான நாடாக மாற்ற வேண்டும், என்று விஞ்ஞானிகளை கவர்னர் வலியுறுத்தினார்.
மேலும், சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி பேசினார்.
இதைத்தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி, விஞ்ஞானிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும் செய்திகள்