தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு திட்டம் போன்று செயல்படுத்துகிறார்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு திட்டம் போன்று செயல்படுத்துகிறார்கள் என்று திமுக மீது அண்ணாமலை குற்றம் சாட்டினார்
தூத்துக்குடி:
தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு திட்டம் போன்று செயல்படுத்துகிறார்கள் என்று தி.மு.க. மீது அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பா.ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு பா.ஜனதாவினர் வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தி.மு.க அரசு கட், கமிஷன், கரப்ஷன் ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டு வருகிறது. ஒரு திட்டம் சார்ந்து நடைபெறும் வேலைகளில் 20 சதவீதம் கமிஷன் கேட்கிறார்கள். முடிக்கப்பட்ட பணிகளுக்கு தொகை ஒதுக்கீடு செய்ய 4 சதவீதம் கமிஷனை கேட்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் இந்த ஊழல்கள் மேல்மட்டத்தில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. எனவே, கட்சியை சேர்ந்த வட்ட செயலாளர், கிளை கழக செயலாளர், தொண்டர்கள் யாரும் களத்தில் மக்கள் பணி செய்வதற்கு முன்வரவில்லை.
மாநில அரசு திட்டங்கள்போன்று...
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, வீடு தேடி மருத்துவம் போன்ற திட்டங்களை, வேறு பெயரில் தி.மு.க.வினர் மாநில அரசின் திட்டங்களை போல செயல்படுத்துகின்றனர். எந்த ஒரு திட்டத்தையும் அறிவார்ந்து யோசித்து, புதிதாக மக்களுக்கு செயல்படுத்தும் திறன் தி.மு.க அரசிடம் இருப்பதாக தெரியவில்லை.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் தொழில் வளத்தை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு, கோவை மாவட்ட விவசாய பகுதியில் 3822 ஏக்கர் பரப்பளவில் தேவையின்றி தொழிற்சாலை அமைக்க முயல்கின்றனர். தமிழகத்தில் ஒரு சாமானிய மனிதன் தொழில் தொடங்க உரிமம் பெறுவதில் இருந்து தொழிலில் வருவாய் ஈட்டும் வரையில் கமிஷன் கேட்கப்படுகிறது. இதை எல்லாம் தவிர்த்தால்தான் தமிழகம் வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நெல்லையில் நிர்வாகிகள் கூட்டம்
இதை தொடர்ந்து அண்ணாமலை நெல்லையில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். முன்னதாக அவர் உடையார்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பயங்கரவாதம் தலை தூக்க எல்லாவிதமான சூழ்நிலையும் இருக்கிறது. அதனால் தமிழக அரசு அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு நன்றாக இருந்தால் தான் தமிழகம் அமைதியாக இருக்கும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு ஒரு வாய்ப்பாக நாங்கள் பார்க்கிறோம்.
ஆளுகிற தி.மு.க. அரசை கேள்வி கேட்ட ஒரே காரணத்துக்காக பா.ஜனதாவினர் 23 பேர் மீது தமிழக அரசு வழக்கு போட்டுள்ளது. பா.ஜனதா தொண்டர்களின் குரல்வளையை நெறிக்க அரசு முயற்சிக்கிறது.
காமராஜர் மணிமண்டபம்
தமிழகத்தில் பா.ஜனதா நிர்வாக ரீதியாக பிரிக்கபட்ட 60 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் அமைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் காவல்துறை சுதந்திரமாக பணி செய்ய வழி செய்யவேண்டும். தமிழக அரசு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு போதிய அதிகாரம் கொடுக்கவில்லை. இதுவரை பார்த்திடாத சம்பவங்களை தமிழகம் சந்தித்து வருகிறது.
காமராஜர் மணி மண்டபம் பராமரிப்பு இன்றி கிடக்கிறது. அதுபற்றி கேட்காமல், உதயநிதிக்கு பதவி வழங்க வேண்டும் என்று காங்கிரசார் கடிதம் எழுதுகிறார்கள்.
பொறியாளர் தற்கொலை
ராதாபுரம் ஒன்றிய பொறியாளர் சந்தோஷ்குமார் தற்கொலை சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை பார்க்கும்போது அனைத்து துறைகளிலும் அரசு மிரட்டி பணிய வைத்து காரியம் சாதிக்க நினைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உடனிருந்தனர்.