7 பேர் விடுதலை கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
7 பேர் விடுதலை கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 பேரை விடுதலை செய்ய வேண்டும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வக்கீல் ராவணன், விருகை ராஜேந்திரன், அன்வர் பேக், தொழிற்சங்கத் தலைவர் அன்பு தென்னரசன் மற்றும் செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
மருது மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் செ.முத்துப்பாண்டி, இந்திய தேசிய லீக் நிர்வாகி கோவை நாசர், தமிழ் தேசிய கிறித்தவர் இயக்கம் சேசுராஜ், வனவேங்கைகள் கட்சி தலைவர் இரணியன், தமிழர் நலப்பேரியக்க தலைவர் மு.களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் அ.வினோத், தமிழ் தேசத் தன்னுரிமை கட்சி தலைவர் அ.வியனரசு ஆகியோர் பேசினர்.