திருவொற்றியூரில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் தீவிரம்
திருவொற்றியூரில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் இன்னும் 4 மாதத்துக்குள் நிறைவு பெற்று, வெகுவிரைவில் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் 400 ஆண்டுகள் பழமையான சின்ன காஞ்சீபுரம் என்று அழைக்கப்படும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில், ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. 2008-ம் ஆண்டு கோவிலில் 5 நிலைகளுடன் ராஜகோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. பல்வேறு காரணங்களால் 10 ஆண்டுகளுக்கு பிறகு ராஜகோபுரம் பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசப்பட்டு கும்பாபிஷேகத்துக்கு தயாரானது. ஆனாலும் கோவில் உள்பிரகாரம், சன்னதி, விமான கோபுரங்கள் புனரமைக்கப்படாமல் இருந்தன. சமீபத்தில் இந்த கோவிலில் ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோவிலில் திருப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்.
இதையடுத்து கோவிலில் புனரமைப்பு பணிகள் கடந்த 11-ந் தேதி பாலாலயத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிறப்பு பூஜைகள், மகாபூர்ணாகுதி உள்ளிட்டவை நடந்தது. இதில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் பெருமாள், மகாலட்சுமி, ஆண்டாள், அனுமன், ராமர், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சன்னதிகளில், சிலைகளை பராமரித்தல் மற்றும் கோவில் உள்பிரகார திருப்பணிகளும் தொடங்கியது. இந்த திருப்பணிகள் இன்னும் 4 மாதத்துக்குள் நிறைவு பெற்று, வெகுவிரைவில் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.