ஈரோடு பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

ஈரோடு பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Update: 2021-12-13 20:59 GMT
ஈரோடு
ஈரோடு பெரியசேமூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
ஈரோடு பெரியசேமூர் பகுதியில் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 10-ந்தேதி கணபதி ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று காலை 9 மணிக்கு பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர்.  11-ந் தேதி காலை பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து முளைப்பாரி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு முதல் கால யாக பூஜையும், இரவு 8.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
புனிதநீர்
நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு 2-ம் கால யாக பூஜையும், 10 மணிக்கு கோபுர கலசம் வைத்தல் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு 3-ம் கால யாக பூஜையும், இரவு 9.30 மணிக்கு தெய்வ சிலைகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று அதிகாலை 4.30 மணிக்கு 4-ம் கால யாக பூஜையும், காலை 6 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்படுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மகா மாரியம்மன் கோவில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்