பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெல்லம் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெல்லம் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஈரோடு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு வெல்லம் விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொங்கல் பண்டிகை
தைப் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன் ஏற்பாடு பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடும் விழாக்களில் பொங்கல் பண்டிகை முதன்மை பெறுகிறது. வீடுகளில் வாசல் பொங்கலும், மாட்டுப்பட்டிகளில் பட்டி பொங்கலும் என பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
விவசாயிகள் தங்களுடைய முதல் விளைச்சலை பொங்கல் வைத்து சூரியனுக்கு படைப்பதும், தங்கள் விவசாய நிலங்களில் தங்களுடன் உழைக்கும் மாடுகளுக்கு படையலிட்டு வணங்குவதும் சிறப்பு. இந்த பண்டிகையின்போது சர்க்கரை பொங்கல் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறோம்.
உருண்டை வெல்லம்
பொங்கலுக்கு அத்தியாவசிய தேவை உருண்டை வெல்லம். பொங்கல் பண்டிகைக்கு வெல்லம் அத்தியாவசியமானதாகும். எனவே கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்கள் வெல்லம் உற்பத்தியை தொடங்கி உள்ளனர். கடந்த சில நாட்களாக உருண்டை வெல்லம் உற்பத்தி தீவிரம் அடைந்து உள்ளது.
ஈரோடு அருகே உள்ள முள்ளாம்பரப்பில் அமைந்து உள்ள கரும்பு ஆலையில் வெல்லம் உற்பத்தி நடந்து வருகிறது.
கரும்பு சாறினை கொப்பரைகளில் ஊற்றி காய்த்து சரியான பதத்தில் பாகு எடுத்து, அதனை உருண்டை வெல்லமாக செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
ஆர்டர்கள் இல்லை
இதுபற்றி கரும்பு ஆலை உரிமையாளர் பரமசிவம் என்பவர் கூறியதாவது:-
உருண்டை வெல்லத்தின் தேவை பொங்கல் பண்டிகையின் போது அதிகமாக இருக்கும். வழக்கமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் பொங்கல் பொருட்கள் வழங்கும்போது உருண்டை வெல்லமும் வழங்கப்படும். இதற்காக அதிக ஆர்டர்கள் வரும். ஆனால் இந்த ஆண்டு இதுவரை ஆர்டர்கள் எதுவும் வரவில்லை.
இதுபோல் வியாபாரிகளும் இன்னும் ஆர்டர்கள் தரவில்லை. எப்படியும் ஆர்டர்கள் வரும் என்ற நம்பிக்கையில் வெல்லம் தயாரித்து வருகிறோம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகையில் வெல்லம் விற்பனை மிகவும் குறைவாகவே இருந்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே உற்பத்தி குறைவாகவே இருக்கிறது.
பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்னும் கரும்பு ஆலைகள் முழுமையாக இயங்க தொடங்கவில்லை. தற்போது 3-ல் ஒரு பங்கு ஆலைகள் மட்டுமே உற்பத்தியை தொடங்கி உள்ளன.
அதுவும் மழை காரணமாக கடந்த 2 மாதங்களாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. காரணம், கரும்பு விலை, கரும்பு வெட்டும் கூலி, வாகன வாடகை ஆகியவை கடுமையாக உயர்ந்து உள்ளன. இதுபோல் கரும்பு ஆலைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் கூலி அதிகமாக உள்ளது. ஆனால், அவர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக அதிக உற்பத்தி இல்லாத நிலையிலும் கூலி கொடுத்து வைத்திருக்கிறோம்.
விலையை உயர்த்த வேண்டும்
பல ஆண்டுகளாகவே உருண்டை வெல்லம் 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் ரூ.1,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்ட நிலையிலும், எங்களிடம் இருந்து வியாபாரிகள் அதே விலைக்குதான் வாங்குகிறார்கள்.
இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே கரும்பு வெல்லம் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம், இதை நம்பி உள்ள தொழிலாளர்களின் நலன் கருதியும், இந்ததொழிலை காப்பாற்ற வேண்டியும் அரசும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்து இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உருண்டை வெல்லத்துக்கு விலை உயர்வு செய்ய ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.