தாய், மகனை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு

நிலப்பிரச்சினை சம்பந்தமாக தாய், மகனை கடத்தி கொலை மிரட்டல் விடுத்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2021-12-13 20:44 GMT
சேலம்,
கூலித்தொழிலாளி
சேலம் மாவட்டம் ஏற்காடு மேல் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மனைவி வசந்தி (வயது 70). இவர்களின் மகன் அசோக்குமார். கூலித்தொழிலாளியான இவர் அந்த பகுதியில் ஜெராக்ஸ் கடையும் நடத்தி வருகிறார். வசந்திக்கு சொந்தமான நிலம் அந்த பகுதியில் உள்ளது.
அசோக்குமார் கடந்த 2016-ம் ஆண்டு தனது தாயார் வசந்தியின் பெயரில் உள்ள நிலத்தை ஏற்காட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் பெற்று உள்ளார். பின்னர் கடன் தொகையை அவர் செலுத்தி உள்ளார். இதையடுத்து வசந்தி அவரது நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுஉள்ளார்.
கொலை மிரட்டல்
இந்த நிலையில் நிலத்தின் அசல் ஆவணம் தன்னிடம் உள்ளது என்றும், எப்படி நிலத்தை மற்றவருக்கு விற்கலாம் என்றும் கூறி வசந்தி மற்றும் அவருடைய மகன் அசோக்குமார் ஆகிய 2 பேரையும் கடந்த 11.3.2016 அன்று கிருஷ்ணமூர்த்தி உள்பட 5 பேர் சேர்ந்து கடத்தி சென்று அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உளளனர். பின்னர் வசந்தி, அசோக்குமார் 2 பேரும் அவர்களிடம் இருந்து தப்பினர். இந்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து அசோக்குமார் ஏற்காடு போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடன் ஓமலூர் கோட்ட கவுண்டம்பட்டியை சேர்ந்த கலைவாணன் (33), வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சக்தி (42), காமலாபுரம் விமான நிலையம் பகுதியை சேர்ந்த ராஜா (31), கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த சுபாஷ் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. 
நிலப்பிரச்சினை சம்பந்தமாக தாய், மகனை கடத்தி இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததற்காக கிருஷ்ணமூர்த்தி, கலைவாணன், சக்தி, ராஜா, சுபாஷ் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1,000 அபராதம் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.
இந்த நிலையில் தீர்ப்பை கேட்டதும் ஆயுள் தண்டனை பெற்ற சக்தி கோர்ட்டு வளாகத்தில் திடீரென்று மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த போலீசார் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் செய்திகள்