வேலை செய்த சம்பளத்தை கொடுக்காமல் கட்டுமான தொழிலாளர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி என்ஜினீயர் மீது கலெக்டரிடம் புகார்
வேலை செய்த சம்பளத்தை கொடுக்காமல் கட்டுமான தொழிலாளர்களிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்ததாக என்ஜினீயர் மீது மாவட்ட கலெக்டரிடம் கட்டுமான தொழிலாளர்கள் புகார் மனு அளித்தனர்.;
சேலம்,
கட்டிட தொழிலாளர்கள்
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் கார்மேகத்திடம் ஒரு புகார் மனுவை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அனைவரும் கட்டுமான தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறோம். சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர், எங்களை புதிதாக கட்டிடம் கட்டும் வேலை இருப்பதாக கூறி அழைத்தார்.
இதைத்தொடர்ந்து சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டிடம் கட்டும் பணியை செய்து வந்ததால் அவ்வப்போது அதற்கு உண்டான பணத்தையும் கொடுத்து வந்தார். தொடக்கத்தில் வீட்டு உரிமையாளர்களிடம் வாங்கும் பணத்தில் எங்களுக்கான தொகையை கொடுத்தார்.
ரூ.8 லட்சம் மோசடி
இதனால் நாங்களும் அடுத்தடுத்து கட்டிடம் கட்டுமான பணிக்கு சென்றோம். ஆனால் 6 வீடுகளை கட்டி முடித்த பிறகு எங்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணத்தை என்ஜினீயர் தராமல் சேலத்தில் இருந்து தலைமறைவாகிவிட்டார். அவர் எங்கு சென்றார்? என்ற விவரம் தெரியவில்லை.
மேஸ்திரி, சென்ட்ரிங், ஆசாரி, எலக்ட்ரீசியன், பெயிண்டர், கதவு பாலிஷ், டைல்ஸ் ஒட்டுதல் உள்பட 9 பேருக்கு ரூ.8 லட்சம் வரை கொடுக்காமல் அவர் மோசடி செய்துவிட்டார்.
இதனால் அந்த 9 பேரிடம் வேலைபார்த்த கட்டுமான தொழிலாளர்கள் சுமார் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையை மோசடி செய்த சம்பந்தப்பட்ட என்ஜினீயர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிய பணத்தை அவரிடம் இருந்து பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே புகார் மனுவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் கட்டுமான தொழிலாளர்கள் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.