மலைக்கிராமத்திற்கு நடந்து சென்று மக்கள் குறைகேட்ட கலெக்டர் கார்மேகம்

மலைக்கிராமத்திற்கு நடந்து சென்று கலெக்டர் கார்மேகம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டார்.

Update: 2021-12-13 20:44 GMT
ஏற்காடு
ஏற்காடு 60 அடி பாலம் பகுதிக்கு கலெக்டர் கார்மேகம் தனது காரில் நேற்று வந்தார். பின்னர் அங்கிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குண்டூர் மலைக்கிராமத்திற்கு நடந்தே சென்றார். அங்கு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம மக்கள் கலெக்டரிடம் கூறியதாவது:-
எங்கள் கிராமத்தில் இருந்து சேலம் செல்ல 37 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏற்காடு டவுன் பகுதியை சுற்றி செல்லவேண்டும். ஆனால் தங்களது கிராமத்தில் இருந்து சேலம் செல்ல மண் சாலை உள்ளது. அந்த வழியாக சென்றால் குறைந்த தொலைவு தான் உள்ளது. எனவே அந்த பாதையை தார் சாலையாக அமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். 
மேலும் பல்வேறுகுறைகளை கேட்டறிந்த மாவட்ட கலெக்டர் வருகிற 19-ந் தேதி குண்டூர் கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்றார். மேலும் இந்த முகாமில், குண்டூரில் இருந்து சேலம் செல்லும் மண் பாதையை தார் சாலையாக அமைக்கும் திட்டத்திற்கு அனுமதி மற்றும் மலைவாழ் மக்களின் சாதிச்சான்றிதழ், பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் நலன், ஆரோக்கியம் விளையாட்டு போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை இந்த முகாமிற்கு அழைத்து வந்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார். கலெக்டருடன், அவரது குடும்பத்தினரும் மலைக்கிராமத்திற்கு நடந்தே சென்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்