சோலைமலை முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
சோலைமலை முருகன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
அழகர்கோவில்
மதுரை அருகே அழகர்கோவில் மலை உச்சியில் ஆறாவது படை வீடான சோலைமலை முருகன் கோவில் உள்ளது.இங்கு ஏற்கனவே கடந்த 3 திங்கட்கிழமைகளும் சோமவார நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நேற்று கார்த்திகை மாத 4-வது சோமவார நிறைவு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் 1008 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள சஷ்டி மண்டப வளாகத்தில் ராமேசுவரத்தில் இருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டிருந்த வெண் சங்குகளை வைத்து நெல் தானியம் மீது ஓம், வேல், சேவல் கொடி வடிவத்தில் 1008 சங்குகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இந்த சங்குகள் முழுவதிலும் ரோஜா, செவ்வந்தி, சம்மங்கி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேலும் உற்சவர் சன்னதி முன்பாக ஒரு ராஜ வலம்புரி சங்கும் மற்றும் 11 வலம்புரி சங்குகள் வைக்கப்பட்டு 3 கும்ப கலசங்கள் வைத்து பூஜைகள் செய்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மேளதாளம் முழங்க 108 மூலிகைகள் வைத்து உலக நன்மைக்காகவும் கடைசி 4-வது சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், உள்பட 16 வகையான அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதைதொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் மூலவர் சுவாமிக்கும், வித்தக விநாயகர் மற்றும் வேல் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான முருக, அய்யப்ப பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நெய் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.