காதலை கைவிட்டதால் காதலி வீட்டு முன் விஷம் குடித்த வாலிபர்
காதலை கைவிட்டதால் காதலியின் வீட்டு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சிவமொக்கா: காதலை கைவிட்டதால் காதலியின் வீட்டு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வாலிபருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
காதலை கைவிட்டதால்...
சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா ஒரபைலு கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுநாத்(வயது 27). இவருக்கு, அதேப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக உயிருக்கு, உயிராக காதலித்து வந்துள்ளனர்.
மேலும் அவர்கள் செல்போனில் பேசுவதுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மஞ்சுநாத்திடம் காதலி பேசுவதையும், அவரை சந்திப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். அதாவது அந்த பெண், மஞ்சுநாத் உடனான காதலை முறித்துகொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி மஞ்சுநாத், காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது அவர் சரியான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மஞ்சுநாத் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
வாலிபர் தற்கொலை முயற்சி
இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலியின் வீட்டின் முன்பு மஞ்சுநாத் சென்றுள்ளார். அப்போது அவர், காதலியை அழைத்தப்படி தான் வைத்து இருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறிதுநேரத்தில் வாலிபர் மயங்கி கீழே விழுந்து உயிருக்கு போராடினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் விசாரணை
இதுபற்றி தகவல் அறிந்த ஒசநகர் போலீசார் சம்பவ இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் மஞ்சுநாத்தின் சட்டை பையில் இருந்த கடிதத்தை கைப்பற்றி படித்து பார்த்தனர். அந்த கடிதத்தில் மஞ்சுநாத், காதலி காதலை கைவிட்டதால் விஷம் குடித்து தற்கொலை செய்ய போவதாக எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒசநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.