மராட்டிய அமைப்பின் தலைவர் மீது கருப்பு மை பூசிய கன்னட அமைப்பினர்
குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடத்திய மராட்டிய அமைப்பின் தலைவர் மீது கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசிய சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி:குளிர்கால கூட்டத்தொடர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் நடத்திய மராட்டிய அமைப்பின் தலைவர் மீது கன்னட அமைப்பினர் கருப்பு மை பூசிய சம்பவம் பெலகாவியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெலகாவி பிரச்சினை
கர்நாடகம்-மராட்டிய மாநில எல்லையில் உள்ளது பெலகாவி மாவட்டம். இந்த மாவட்டத்தில் மராத்தி மொழி பேசும் மக்கள் கணிசமாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெலகாவி மராட்டியத்துடன் இணைந்த பகுதி என்றும், இதனால் பெலகாவியை தங்களுக்கு விட்டு கொடுக்க வேண்டும் என்றும் மராட்டியம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறது.
ஆனால் பெலகாவி கர்நாடகத்தின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், எக்காரணத்தை கொண்டும் பெலகாவியை விட்டு கொடுக்க மாட்டோம் என்றும் கர்நாடகம் கூறி வருகிறது. மேலும் பெலகாவி கர்நாடகத்திற்கு சொந்தமானது என்பதை நிரூபிக்கும் வகையில் பெலகாவி சுவர்ண சவுதாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. பெலகாவி விஷயத்தில் 2 மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
அனுமதி இன்றி கூட்டம்
இந்த நிலையில் நேற்று பெலகாவி சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. ஆனால் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்த மராட்டிய ஏகிகிரண் சமிதி (எம்.இ.எஸ்) என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் பெலகாவியில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தும் கர்நாடக அரசை கண்டித்து நேற்று பெலகாவி திலக்கவாடியில் உள்ள மைதானத்தில் எம்.இ.எஸ். அமைப்பு சார்பில் மகா மேளவ் என்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் போலீசாரின் அனுமதியின்றி நடந்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்ததும் அந்த மைதானத்திற்கு பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் தியாகராஜன், திலக்கவாடி போலீசார் சென்றனர். அங்கு கூட்டம் நடத்திய எம்.இ.எஸ். அமைப்பினரிடம் குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதால் போராட்டம், கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை. இதனால் கலைந்து செல்லுங்கள் என்று போலீசார் கூறினர். ஆனால் இதனை ஏற்க மறுத்த எம்.இ.எஸ். அமைப்பினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு மை பூசிய கன்னட அமைப்பினர்
அப்போது அங்கு வந்த கர்நாடக நவநிர்மாண படை என்ற கன்னட அமைப்பினர், எம்.இ.எஸ். அமைப்பினருடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது கன்னட அமைப்பினர், எம்.இ.எஸ். அமைப்பை சேர்ந்த மூத்த தலைவரான தீபக் தல்வி என்பவரின் மீது கருப்பு மை பூசினர்.
இதனால் அங்கு கன்னட அமைப்பினர், எம்.இ.எஸ். அமைப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உண்டானது. இதையடுத்து இருதரப்பினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
முழுஅடைப்புக்கு அழைப்பு; போலீஸ் கடும் எச்சரிக்கை
மராட்டிய அமைப்பின் மூத்த தலைவர் தீபக் தல்வி மீது கருப்பு மை பூசப்பட்டதை கண்டித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பெலகாவியில் முழு அடைப்பு போராட்டத்திற்கு எம்.இ.எஸ். அமைப்பு அழைப்பு விடுத்து உள்ளது.
ஆனால் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும், அதை மீறி போராட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் கமிஷனர் தியாகராஜன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க பெலகாவி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது.