மதுபாட்டில்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை:
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுபாட்டில்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபாட்டில்களுடன் போராட்டம்
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதி பெண்கள், மக்கள் தேசம் கட்சி மாவட்ட செயலாளர் வக்கீல் கண்ணன் தலைமையில் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் திடீரென்று கையில் மதுபாட்டில்களை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பெண்கள் கையில் வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அப்போது அவர்கள், அதில் குளிர்பானம் நிரப்பி வைத்திருப்பதாக கூறினர். ஆனாலும் போலீசார் அந்த பாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். அப்போது அவர்கள், தங்களது கோரிக்கைகயை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கும்படி போலீசார் அனுப்பி வைத்தனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு
தொடர்ந்து அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-
திசையன்விளையில் சுமார் 10 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊர் ராதாபுரம் தாலுகாவில் இருந்து பிரிந்து தனி தாலுகாவாக கடந்த 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ஊருக்கு அருகில் 2 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன.
தற்ேபாது திசையன்விளை தாலுகாவுக்கு உட்பட்ட நவ்வலடி ரோட்டில் எருமைகுளம் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். இங்கு பிரசித்தி பெற்ற இசக்கி அம்மன் கோவில், பள்ளி, கல்லூரி, ஐ.டி.ஐ.கள் செயல்பட்டு வருகின்றன. நவ்வலடி ரோட்டில் அமைய இருக்கும் டாஸ்மாக் கடையால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். மாணவ-மாணவிகளுக்கு இடையூறாக இருக்கும். எனவே அங்கு புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.