மிரட்டி கற்பழித்து திருமணம் செய்துவிட்டு தலைமறைவு; விவசாயி மீது போலீசில் இளம்பெண் புகார்
திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வருவதாக நம்பவைத்து தன்னை மிரட்டி கற்பழித்ததுடன் பின்னர் திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக விவசாயி மீது போலீசில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
கொள்ளேகால்: திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வருவதாக நம்பவைத்து தன்னை மிரட்டி கற்பழித்ததுடன் பின்னர் திருமணம் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாக விவசாயி மீது போலீசில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
நல்ல வரன் தேடி தருவதாக...
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் டவுனில் இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர், கொள்ளேகால் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், கொள்ளேகால் தாலுகா ஹளே அகனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி(வயது 37). விவசாயியான இவர், எனது பெற்றோருக்கு அறிமுகமானார்.
பின்னர் அவர், எனது பெற்றோரிடம் உங்கள் பெண்ணுக்கு நல்ல வரன் தேடி கொடுப்பதாக கூறினார். அதன்படி சில நாட்கள் கழித்து வரன் ஒன்று இருக்கிறது என்று கூறி துரைசாமி, என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு வீட்டில் வைத்து துரைசாமி, எனக்கு குளிர்பானம் தந்தார். ஆனால் அதனை நான் குடிக்கவில்லை.
இதையடுத்து அவர், எனது கை கால்களை கட்டி வாயில் துணியை திணித்து என்னை கற்பழித்தார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். இவ்வாறு தொடர்ந்து அவர் என்னை மிரட்டி கற்பழித்தார்.
தலைமறைவு
இதுபற்றி எனது பெற்றோரிடம் ெதரிவித்தேன். ஆனால் எனது பெற்றோருக்கும், துரைசாமி கொலை மிரட்டல் விடுத்தார். இதற்கிடையே துரைசாமி, என்னை திருமணம் செய்வதாக சம்மதம் தெரிவித்தார். அதன்படி கடந்த 17 நாட்களுக்கு முன்பு துரைசாமி கோவில் ஒன்றுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்ததும் கொள்ளேகாலில் வாடகை வீடு எடுத்து அதில் வசித்து வந்தோம்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்து துரைசாமி தலைமறைவாகிவிட்டார். அதனால் அவரை தேடிகண்டுபிடித்து தன்னுடன் வாழவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள துரைசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.