மாங்குடி பெரியகுளத்தில் உடைப்பு
அன்னவாசல் அருகே மாங்குடி பெரியகுளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது
அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மாங்குடியில் பெரியகுளம் ஒன்று உள்ளது. இக்குளத்தை சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக குளம் முழுமையாக நிரம்பியுள்ளது. இதனால், எந்நேரமும் குளத்தின் கரை உடையலாம். ஆகவே, குளத்தின் கரைகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறைக்கு அப்பகுதி ஆயக்கட்டுதாரர்கள், விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். இந்த நிலையில் பெரியகுளத்தின் ஒரு பகுதியில் நேற்று திடீரென உடைப்பு ஏற்பட்டு சுற்றியுள்ள விளை நிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் அனைத்தும் மூழ்கின.
பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைப்பு
இதுகுறித்து தகவல் பரவியதும் அப்பகுதி பொதுமக்கள் குளக்கரையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் உடைப்பை சரி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். குளத்தில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டால் விவசாய நிலங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிடும். எனவே, பொதுப்பணித்துறையினர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.