கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்
கடலூரில் நடந்த பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 586 மனுக்களை, கலெக்டரிடம் அளித்தனர்.
அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், அதனை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்து மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும் என அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த தனலட்சுமி என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, குணமடைந்ததையடுத்து அவரது குடும்பத்தினருடன் கலெக்டர் சேர்த்து வைத்தார்.
கலெக்டரிடம் வாக்குவாதம்
இதற்கிடையே மனு அளிப்பதற்காக குறைகேட்பு கூட்டத்திற்கு வந்திருந்த காட்டுக்கூடலூர் பகுதி விவசாயிகள் தங்களுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி கலெக்டரை திடீரென முற்றுகையிட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களை கலெக்டர் சமாதானப்படுத்தி குறைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள், கடந்த ஆண்டு பெய்த கனமழையால் எங்கள் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அந்த பயிர்களுக்கு நாங்கள் ஏற்கனவே பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருந்தோம்.
காப்பீட்டு தொகை
ஆனால் பயிர்கள் சேதமடைந்ததற்கு எங்களுக்கு இதுவரை காப்பீட்டு தொகை வழங்க வில்லை. இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் எங்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத்சிங், தனித்துணை ஆட்சியர் பரிமளம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.