தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-12-13 18:48 GMT
புதுக்கோட்டை
குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
புதுக்கோட்டை நகராட்சி 20-வது வார்டுக்கு உட்பட்ட மேலராஜ வீதி,  மேல 2-ம் வீதி ஆகிய பகுதிகளில் அஞ்சல் அலுவலகம், போலீஸ் நிலையம், மருத்துவமனைகள், கோவில்கள், கடைகள் என ஏராளமாக உள்ளன. இதனால் இப்பகுதியில்  எப்போதும் போக்குவரத்து இருந்துகொண்டே இருக்கும். இந்த நிலையில் சந்து பகுதிகளிலும், சாலையோரத்திலும் இப்பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ஆறுமுகம், புதுக்கோட்டை. 

அள்ளப்படாமல் உள்ள சாக்கடை மண்
கரூர் வெங்கமேடு பிட்டர் பழனியப்பன் தெருவில் கழிவுநீர் வாய்க்காலில் இருந்து  சாக்கடை மண் அள்ளப்பட்டு சாலையோரத்தில் கொட்டப்பட்டு 25 நாட்கள் ஆகியும் அவை அகற்றப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் கரூர் நகராட்சி உடனடியாக இந்த சாக்கடை மண்ணை அப்புறப்படுத்த  உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், வெங்கமேடு, கரூர். 

மாயமான விளையாட்டு மைதானம் 
அரியலூர் வட்டம், வெற்றியூர் ஊராட்சிக்கு உட்பட்ட  4 கிராமத்திற்கு பொதுவாக வெற்றியூர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த மைதானம் அருகில் உள்ள சின்னேரியை ஆக்கிரமித்து  ஏரியின் மேற்குபுறமாக இருந்த அணையை அகற்றிவிட்டு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. தற்போது கனமழையின் காரணமாக சின்னேரியின் மேற்குபுற அணை இல்லாததால் விளையாட்டு மைதானம் மாயமாகி உள்ளது. மேலும் அந்த மைதானத்திற்கு அருகில் உள்ள கருப்புசாமி கோவிலிலும் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் மக்கள் வழிபாடு செய்ய வழியில்லாமல் தவிர்த்து வருகின்றனர். கோவிலுக்கு வடக்குபுறமாக சுமார் 50 ஹெக்டர் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் கால்நடைகளுக்கு தீவனம் கொண்டு வர முடியாமல் அதிக சிரமத்தில் இருக்கின்றனர். பஞ்சாயத்து நிர்வாகம் விளையாட்டு மைதானம் மற்றும் சின்னேரியின் அணை ஆகிய இரண்டையும் மீட்டு மேற்கண்ட பிரச்சினையை தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள்,  வெற்றியூர், அரியலூர்.

சாலையில் திரியும் நாய்களால் விபத்து 
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகர் விஸ்தரிப்பு பகுதியில் ஏராளமான நாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதனால் கடைகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கும், சாலையில் நடந்து செல்லும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் மிகவும் அச்சுறுத்தலாக உள்ளது. மேலும் இரவு நேரத்தில் நாய்கள் திடீரென சாலையின் குறுக்கே  ஓடுவதால் வாகன ஓட்டிகள்  விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சியில் பல தடவை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மேலகல்கண்டார் கோட்டை, திருச்சி. 

சாலையின் பக்கவாட்டில் பள்ளம் 
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் நமங்குணம் ஊராட்சியின் பழமலைநாதபுரம்- குடிக்காடு முதல் நல்லநாயகபுரம் வரையிலான புதியதாக போடப்பட்ட தார்சாலையின் இருபுறமும் பக்கவாட்டில் சரியாக மண் கொட்டாமல் பள்ளமாக இருப்பதால் வாகனம் ஒதுங்குவது சிரமமாக உள்ளது. மேலும் சமீபத்தில் ஒரு சிறுவன் இப்பள்ளத்தில் விழுந்து விட்டான்.  ஆகையால் இதனை சரி செய்ய ஆவண  செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், நமங்குணம், அரியலூர். 

பாழடைந்த பொதுகிணறு பயன்பாட்டிற்கு வருமா? 
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், அல்லிநகரம் கிராம ஊராட்சியில் உள்ள கீழ உசேன்நகரம் கிராமத்தில்  வசிக்கும் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் பொது கிணறு அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பொது கிணற்றின் குடிதண்ணீரை எடுத்து, அல்லிநகரம் ஊராட்சியில் உள்ள அல்லிநகரம், மேலஉசேன்நகரம், தொண்டப்பாடி கிராம மக்கள் ஒரு காலத்தில் பயன் பெற்று வந்தனர். தற்போது பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் மரம்-செடிகொடிகள் வளர்ந்த நிலையில் புதராகவும், கிணற்றின் அடிப்பாகத்தில் மண்ணரிப்பும் ஏற்பட்டு பாழடைந்த நிலையில் இந்த கிணறு  உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக வறண்டு காணப்பட்ட இந்த கிணறு தற்போது பெய்த மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளது. எனவே இந்த பொது கிணற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அல்லிநகரம் ஊராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
 மணிவேல், அல்லிநகரம், பெரம்பலூர்.

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, வாழவந்தான் கோட்டை கிராமம், காமாட்சி அம்மன் நகர் பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீர் தாழ்வான பகுதிகளிலும், காலி மனைகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரமேஷ், காமாட்சி அம்மன் நகர், திருச்சி. 

தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி மாவட்டம், அரியமங்கலம் கோட்டம்,  ஜின்னா திடலில் உள்ள ஒரு பாத்திரக்கடை அருகில், சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை மூடி பழுதடைந்து காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வந்த நிலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையின் நடுவே பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு கீழே விழுந்து காயம் அடைந்து வந்தனர். இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த பாதாள சாக்கடை மூடியை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
சையது முஸ்தபா,  பூக்கொல்லை தெரு,  திருச்சி.

பாதாள சாக்கடையின் மூடிகளில் உடைப்பு 
திருச்சி சங்கிலியாண்டபுரம் மெயின்ரோட்டில் பாதாள சாக்கடையின் மூடி சிமெண்டு  சிலாப்புகள் உடைந்து கம்பிகள் வெளியே நீட்டியவாறு காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். உடைந்துள்ள சிலாப்புகளின் வழியாக ஆடுகள் விழுந்து கிடக்கின்றது. மேலும் மழை பெய்யும்போது,  மழைநீருடன் கழிவுநீர் கலந்து மேலே பொங்கி வழிந்தோடுகிறது.  இப்பகுதியில் உள்ள அனைத்து பாதாள சாக்கடை மூடிகளில்  சிலாப்புகளும் உடைந்து உள்ளன. எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சங்கிலியாண்டபுரம், திருச்சி. 

தார் சாலை அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அலகரை ஊராட்சிக்கு உட்பட்ட கோடியாம்பாளையம் கிராமத்தில் தேரோடும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதற்கான டெண்டர் கடந்த 2020-ம் ஆண்டு தொட்டியம்  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் விடப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டிற்கு மேலாகியும் தார் சாலை போடவில்லை. இதன் காரணமாக தற்போது பெய்த தொடர் மழை காரணமாக, மேலும் சாலையில் அதிகமாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆகவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  
பொதுமக்கள், கோடியாம்பாளையம், திருச்சி. 

மேலும் செய்திகள்