திருப்பத்தூர்,
அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
பாதுகாப்பு வாகனம் கவிழ்ந்தது
சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் நேற்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வந்தார். அவரின் பாதுகாப்புக்காக புதுக்கோட்டை ஆயுதப்படையில் இருந்து மதுரை விமான நிலையத்தை நோக்கி நேற்று சிறப்பு வாகனம் வந்து கொண்டிருந்தது.
அந்த வாகனம் மதியம் 2.45 மணியளவில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறுகூடல்பட்டி விலக்கு ரோடு பகுதியில் வந்த போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
5 போலீசார் படுகாயம்
இந்த விபத்தில் பாதுகாப்பு வாகனத்தில் வந்த போலீஸ் அதிகாரி சிவகுரு, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன், தலைமை ஏட்டு குணசேகரன் (டிரைவர்), போலீசார் விக்னேஷ், கருப்பையா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கீழச்சிவல்பட்டி போலீசார், காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு முதல் உதவி அளித்து மேல்சிகிச்சைக்காக 5 பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.