குமரி வாலிபர் மர்ம சாவு

மாலத்தீவில் வேலைக்கு சென்ற குமரி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.;

Update: 2021-12-13 17:56 GMT
திருவட்டார், 
மாலத்தீவில் வேலைக்கு சென்ற குமரி வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஓட்டலில் வேலை
குமரி மாவட்டம் வேர்க்கிளம்பியை அடுத்த பூவன்கோடு மார்த்தாண்டன்விளையை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருடைய மகன் பிரின்ஸ் (வயது25). இவர் கடந்த நவம்பர் மாதம் மாலத்தீவுக்கு வேலைக்கு சென்றார். அங்கு ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் கடந்த 9-ந்தேதி பிரின்ஸ் இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து மாலத்தீவில் வசிக்கும் தமிழர்களின் உதவியுடன் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாவில் சந்தேகம்
இந்தநிலையில், குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. பிரின்ஸ் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி, தமிழக தொழிலாளர்துறை அமைச்சர் மற்றும் மாலத்தீவுக்கான இந்திய ஹை கமிஷன் அதிகாரிக்கு ஒருகோரிக்கை மனு அனுப்பி உள்ளார். 
அந்த மனுவில், ‘மாலத்தீவில் வாலிபர் பிரின்சின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்தார் என்று கூறப்பட்டாலும் இதில் சந்தேகம் உள்ளது. இது தொடர்பாக, பிரேத பரிசோதனையுடன் தடயவியல் சோதனை நடத்தி உண்மை கண்டறிய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.மாலத்தீவுக்கு வேலைக்கு சென்ற குமரி வாலிபர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்