தொழிலாளியை தாக்கி கடத்திய கும்பல்

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளியை தாக்கி டெம்போவில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Update: 2021-12-13 17:52 GMT
குளச்சல்,
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் தொழிலாளியை தாக்கி டெம்போவில் கடத்திய கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
டெம்போவில் கடத்தல்
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் மறுகால் தலை காலனியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகன் செல்லையா (வயது22), துப்புரவு தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது அண்ணன் அய்யாக்குட்டி என்பவரும் குளச்சல் மீன்பிடி துறைமுக பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தார். 
அப்போது அங்கு டெம்போவில் ஒரு கும்பல் வந்தது. அந்த கும்பல் திடீரென செல்லையாவை சரமாரியாக தாக்கி டெம்போவில் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். இதை பார்த்த அய்யாக்குட்டி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.
தொடர்ந்து செல்லையாவை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால், அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
போலீசார் விசாரணை
இதுகுறித்து செல்லையாவின் தாயார் நாச்சியார் குளச்சல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் செல்லையாவுக்கும், சிலருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதம் இருந்ததாகவும், இதனால், கடத்தல் சம்பவம் நடந்ததாகவும் தெரிகிறது. 
இதுதொடர்பாக மயிலாடி காமராஜர் சாலையை சேர்ந்த மதுரை வீரன், சந்தோஷ், அய்யப்பன், பார்வதி மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது போலீசார் கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும், கடத்தப்பட்ட தொழிலாளியின் கதி என்ன? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்