திருக்கோவிலூர் அருகே பரபரப்பு குழந்தையை குளத்தில் வீசி கொன்று தாய் தற்கொலை முயற்சி
திருக்கோவிலூர் அருகே பெண் குழந்தையை குளத்தில் வீசி கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் இன்னொரு பெண் குழந்தையுடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திருக்கோவிலூர்
தொழிலாளி
திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் போலீஸ் சரகம் ஆடுர்கொளப்பாக்கம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன், கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயந்தி(வயது 24). ஒரே ஊரை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் தன்யாஸ்ரீ, 6 மாதத்தில் தனிஷ்கா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளது.
குழந்தைகளை குளத்தில் வீசினார்
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயந்தி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வந்ததாக தெரிகிறது. இதை அறிந்த கணவர் மற்றும் மாமியார் மல்லிகா ஆகியோர் அவரை கண்டித்தனர். இதனால் மனம் உடைந்த ஜெயந்தி நேற்று தனது தாய் வீட்டில் நிற்கும் குழந்தைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.
பின்னர் அவர் அங்கிருந்து தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு யாரும் எதிர்பாராத வகையில் அதே ஊரில் உள்ள குளத்துக்கு சென்றார். அங்கு மனதை கல்லாக்கி கொண்டு தான் பெற்ற 2 குழந்தைகளையும் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக தூக்கி குளத்தில் வீசி விட்டு தானும் உள்ளே குதித்தார். இதில் 2 குழந்தைகளும், தாயும் குளத்தில் மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
6 மாத குழந்தை சாவு
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து குளத்தில் மூழ்கிய ஜெயந்தி மற்றும் தன்யாஸ்ரீ ஆகியோரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் குழந்தை தனிஷ்கா நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் விரைந்து சென்று பலியான குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோகம்
திருக்கோவிலூர் அருகே தாய் வீட்டுக்கு சென்றதை கணவர் கண்டித்ததால் மனமுடைந்து குழந்தையை குளத்தில் வீசி கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாயும், இன்னொரு குழந்தையும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.