வீட்டை காலி செய்ய நெருக்கடி: 12 வயது மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்-கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

வீட்டை காலி செய்ய நெருக்கடி கொடுப்பதாக கூறி 12 வயது மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-12-13 17:00 GMT
கிருஷ்ணகிரி:
தீக்குளிக்க முயற்சி 
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகத்துக்கு பெண் ஒருவர் தனது மகனுடன் வந்தார். திடீரென அவர் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். 
அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரித்த போது அந்த பெண்ணின் பெயர் அலமேலு என்றும், அவருடன் வந்தது 12 வயது மகன் நிதிஷ் என தெரிய வந்தது.
மேலும் தொகரபரப்பள்ளி அருகே உள்ள பாகிமானூர் கூட்டு ரோட்டில் அவர்கள் வசித்து வந்த வீட்டை அலமேலுவின் சகோதரர் காலி செய்ய மிரட்டியதாகவும், இது தொடர்பாக மத்தூர் போலீசில் சமரசம் பேசியும், தொடர்ந்து காலி செய்ய தொல்லை கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
பரபரப்பு
இதனால் மனமுடைந்த அலமேலு, மகனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களிடம் பேசிய போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அலமேலுவையும், அவரது மகனையும் அனுப்பி வைத்தனர். 
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மகனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்