கண்டாச்சிபுரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை செல்போன் கடையில் ரூ 1 லட்சம் பணம் பொருட்கள் திருட்டு

கண்டாச்சிபுரத்தில் மர்ம நபர்கள் கைவரிசை செல்போன் கடையில் ரூ 1 லட்சம் பணம் பொருட்கள் திருட்டு 2 கோவில்களில் உண்டியலை உடைக்க முயற்சி

Update: 2021-12-13 16:55 GMT
திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ள அங்காளம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில்களின் கேட்டில் போடப்பட் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த உண்டியல்களை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் உண்டியல்கள் சுவற்றில் புதைக்கப்பட்டு இருந்ததால் அவற்றை உடைக்க முடியாததால் அதில் இருந்த பணம் தப்பியது. ஏமாற்றம் அடைந்த மர்ம நபர்கள் அருகில் உள்ள செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 20 செல்போன்கள், லேப்டாப் மற்றும் கண்காணிப்பு கேமராவை பதிவு செய்யும் கருவி மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து கடையின் உரிமையாளர் உமா சங்கர்(வயது 36) கொடுத்த புகாரின் பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விரைந்து சென்று கொள்ளை நடந்த செல்போன் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருடு போன பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ.1½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 2 கோவில்களில் உண்டியலை உடைக்க முடியாததால் செல்போன் கடையில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் கண்டாச்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்