விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ்
விழுப்புரத்தில் பெண்ணிடம் நகை, பணம் அபேஸ் செய்த பெண்ணை போலீசாா் தேடி வருகின்றனா்.
விழுப்புரம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் விஜயன் மனைவி ரம்யா (வயது 32). இவர் விழுப்புரம் அருகே ஆயந்தூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு வந்து விட்டு மீண்டும் விருத்தாசலத்திற்கு செல்ல விழுப்புரம் வந்தார்.
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் ஒரு ஓட்டலில் உணவு சாப்பிட செல்லும்போது அங்கு வந்த பெண் ஒருவர், ரம்யாவிடம் சென்று கீழே 10 ரூபாய் நோட்டு கிடக்கிறது, அது உங்களுடைய பணமா என்று பாருங்கள் எனக்கூறினார். உடனே ரம்யா, கீழே குனிந்து பார்த்தார்.
அந்த சமயத்தில் ரம்யா வைத்திருந்த துணிக்கடை பையில் இருந்த கைப்பையை அந்த பெண் நைசாக அபேஸ் செய்துவிட்டார். அந்த கைப்பையில் 2½ பவுன் நகை மற்றும் ரூ.6 ஆயிரம் இருந்தது. நகை, பணம் திருட்டுப்போனதை அறிந்து ரம்யா அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை அபேஸ் செய்த பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தினால் பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.