டிராக்டர்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்
கொரடாச்சேரியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிராக்டர்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. டிராக்டர்களில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்று மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
மண் பாத்திரங்களை பல ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்தனர். நாகரீக உலகில் உலோகங்களால் ஆன பாத்திரங்கள் வந்ததற்கு பின் மண் பாத்திரங்களின் பயன்பாடு குறைந்துவிட்டது. மண்பாத்திரங்களில் சமைப்பதும், மண்பானைகளில் தண்ணீரை பிடித்து வைத்து குடிப்பதும் உடலுக்கு நல்லது என விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் ஓரளவு மண் பாத்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தைப்பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பெரும்பாலான கிராமங்களில் இன்றும் மண்பானைகளிலேயே பொங்கல் வைக்கும் பழக்கம் பாரம்பரியமாக உள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் பொங்கல் பண்டிகை வர உள்ளது. இதனை முன்னிட்டு பானை, சட்டி உள்ளிட்ட பாத்திரங்களை தயாரிக்கும் பணிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
டிராக்டரில் மண் எடுக்க அனுமதி
பொங்கல் பண்டிகைக்கு மண் பாத்திரங்களின் தேவை அதிகமாக உள்ளதால், கூடுதல் மண் எடுத்து வந்து மண்பாண்டங்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக தேவைப்படும் கூடுதல் மண்ணை டிராக்டர்களில் எடுத்து வர அரசு தடை விதித்துள்ளது. மண் பாத்திரங்கள் செய்வதற்கு ஏற்ற வண்டல் கலந்த களிமண் ஆற்றங்கரைகளில் தான் கிடைக்கிறது. தற்போது மண்ணை டிராக்டர்களில் எடுத்து வர தடை உள்ளதால், தொழிலாளிகள் தலை சுமையாகவே கொண்டுவர வேண்டியுள்ளது. இதனால் மண் பாத்திரங்கள் செய்ய கூடுதல் கால விரயம் ஏற்படுகிறது. எனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிக்க டிராக்டர்கள் மூலம் மண் எடுத்து வர அனுமதிக்க வேண்டும்.
கூடுதல் மானியம்
அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மண்பாண்டம் செய்யும் தொழில் நடைபெற இயலாது என்பதால், அரசு மானிய தொகையை அறிவித்து வழங்கி வருகிறது. இந்த மானியம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திலேயே வழங்கப்படுகிறது. இந்த தாமதத்தை தவிர்த்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் மானிய தொகை வழங்க வேண்டும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மண்ணால் செய்யப்படும் விநாயகர் சிலைகள் செய்ய தடை விதிக்கப்பட்டு இருந்ததால் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே மண்பாண்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த கூடுதல் மானியத்தை வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.