ஜவுளி கடைக்கு ரூ20 ஆயிரம் அபராதம்

ஜவுளி கடைக்கு ரூ20 ஆயிரம் அபராதம்;

Update: 2021-12-13 16:27 GMT
பொள்ளாச்சி

கொரோனா விதிமுறையை மீறியதாக ஜவுளி கடைக்கு நகராட்சி அதிகாரிகள் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

கடையில் திரண்ட கூட்டம்

பொள்ளாச்சி நகர கிழக்கு போலீஸ் நிலையம் அருகில் கமலிகா சில்க்ஸ் என்கிற ஜவுளி கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை திறந்து 100-வது நாளையொட்டி வேட்டி ரூ.10-க்கும், சேலை ரூ.50-க்கும் விற்பனை செய்வதாக அறிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான டோக்கனும் வினியோகம் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த பொதுமக்கள் நேற்று கடை முன் திரண்டனர்.
இதனால் கடை முன்பு கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை போலீசார் நின்று ஒழுங்குப்படுத்தினர். இதற்கிடையில் கூட்டம் ரோடு வரை நின்றதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொதுமக்கள் கூட்டம் திரண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

ரூ.20 ஆயிரம் அபராதம்

இந்த தகவலின் பேரில் ஆணையாளர் தாணுமூர்த்தி உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், ஜெயபாரதி, மணிகண்டன், செந்தில்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் கடையில் ஆய்வு செய்த கொரோனா நோய் பரவும் வகையில் கூட்டம் கூடியது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் கொரோனா விதிமுறையை மீறியதாக அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், கொரோனா விதிமுறைகளை மீறி சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல், முகக்கவசம் அணியாமல் தொற்று பரவும் வகையில் கடையில் கூட்டம் கூடியதால் கமலிகா ஜவுளி கடைக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்று தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு விதிமுறைகளை மீறும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்