நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

Update: 2021-12-13 16:17 GMT
தாராபுரம், 
தாராபுரத்தில் அரசு பஸ் மோதிய விபத்தில் காயம் அடைந்த விவசாயிக்கு நஷ்டஈடு வழங்காததால் தாராபுரம் நீதிபதி உத்தரவின் பேரில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. 
விபத்தில் விவசாயி காயம்
தாராபுரத்தை அடுத்த சின்னப்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 61). இவர் கடந்த 26.7.2003 அன்று காலை சின்னபுத்தூர் செல்ல   பொள்ளாச்சி சாலை சந்திப்பில் மொபட்டில் சென்றார். அப்போது கோவையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று அவர் மீது மோதியது. 
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ராஜாமணி தாராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விபத்து வழக்கு மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடினார்.
நஷ்ட ஈடு
இந்த வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு கூடுதல் நீதிமன்ற நீதிபதி குமார் சரவணன் பாதிக்கப்பட்ட விவசாயி ராஜாமணிக்கு நஷ்டஈடு தொகையாக ரூ.1 லட்சத்து 23  ஆயிரம் வழங்க வேண்டும் என்று கடந்த 17.12.2019 தேதி அன்று தீர்ப்பளித்தார். ஆனால் ஈரோடு மாவட்ட போக்குவரத்து நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. 
இதனால் மன உளைச்சலான ராஜாமணி நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அப்போது நீதிபதி குமார் சரவணன் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு 1லட்சத்து 23 ஆயிரத்துடன் வட்டி சேர்த்து ரூ.2 லட்சத்து 21 ஆயிரத்து 410 வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
பஸ் ஜப்தி
ஆனால் போக்குவரத்து அதிகாரிகள் பணம் வழங்க தவறியதால் ஈரோடு கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி குமார் சரவணன் உத்தரவிட்டார். அதன் பேரில் நேற்று மதியம் தாராபுரம் புது பஸ் நிலையத்தில் நின்ற பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் தாராபுரம் பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்