உடுமலையில் தக்காளி விலை சிறிது குறைந்தது
உடுமலையில் தக்காளி விலை சிறிது குறைந்தது
உடுமலை,
உடுமலையில் தக்காளி விலை சிறிது குறைந்தது.மேலும் குறைய வாய்புள்ளதாகக்கூறப்படுகிறது.இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
காய்கறி கமிஷன் மண்டி
உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தக்காளி சாகுபடி அதிகம் உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் தக்காளி செடிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. தக்காளி பழங்களை பறிக்க முடியாத நிலையில் சில இடங்களில் இன்னும் மழைத்தண்ணீர் தேங்கி நிற்கிறது.
உடுமலை சுற்று வட்டாரப்பகுதிகளில் விளையும் தக்காளி, உடுமலை ராஜேந்திரா சாலையில் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் உள்ள காய்கறி கமிஷன் மண்டிகளுக்கு தினசரி கொண்டு வரப்படும். அவைஅங்கு கமிஷன் மண்டி உரிமையாளர்களால் ஏலம் விடப்படும். ஏலத்தொகையில் கமிஷனை எடுத்துக்கொண்டு மீதித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். சீசன் சமயங்களில் நாள் ஒன்றுக்கு 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டிகள் 15 ஆயிரத்திற்கு மேல் வரும். அப்போது தக்காளியின் விலை குறைவாக இருக்கும்.
விலை குறைந்தது
தற்போது தக்காளி வரத்து குறைந்துள்ளது. ஆந்திராவில் இருந்து சிறிதளவு தக்காளி வருகிறது. இந்த நிலையில் இந்த கமிஷன் மண்டிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெட்டி ரூ.1200-க்கு மேல் விற்றது. நேற்று முன்தினம் ரூ.800 முதல் ரூ.900 வரை விற்பனை ஆனது. நேற்று 14 கிலோ கொண்ட சுமார் 2,500 பெட்டிகள் தக்காளி ஏலத்திற்கு வந்திருந்தது.
ஆனால் அவற்றை வாங்குவதற்கு வியாபாரிகள் குறைவாகவே வந்திருந்தனர்.அவர்களிலும் பலர் ஏலம் கோராமல் நின்று கொண்டிருந்தனர்.அதனால் ஒருபெட்டி தக்காளிரூ.600முதல்ரூ.700 வரை மட்டுமே ஏலம் போனது. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது.பலத்த மழையினால் செடிகள் பாதிக்கப்பட்டு தக்காளி பழங்களை பறிக்கமுடியாத நிலையில் விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
இல்லத்தரசிகள் நிம்மதி
இதுவரை திருமணம் உள்ளிட்ட சுப விசேஷங்களுக்காக தக்காளி விற்பனை ஒரளவு இருந்தது.நேற்றுடன் கார்த்திகை மாதத்தில் முகூர்த்த நாள் நிறைவடைந்தது. வருகிற 16-ந்தேதி மார்கழி மாதம் பிறக்கிறது. மார்கழி மாதத்தில் முகூர்த்த நாட்கள் இல்லை.
அதனால் மார்கழி மாதத்தில் தக்காளி, வீடுகள் மற்றும் உணவகங்களின் தேவைக்கு மட்டுமே விற்பனை ஆகும். அதனால் வருகிற நாட்களில் தக்காளி வரத்து அதிகரித்தால், விலை இன்னும் குறையக்கூடும் என்று வியாபாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
உழவர் சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உள்ள உழவர் சந்தையில் நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது நேற்று ரூ.55 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டது.