பழுதடைந்த சாலை
நல்லட்டி பாளையத்தில் இருந்து கிணத்துக்கடவு செல்லும் கிராம வழிச்சாலை 3 கிலோ மீட்டர் தூரம் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
பிரவீன், நல்லட்டிபாளையம்.
மூடியிருக்கும் கழிவறை
ஊட்டி டவுன் பஸ்நிலையத்தில் குந்தா உள்ளிட்ட பஸ்கள் நிற்கும் இடத்தில் இருக்கும் கழிவறை பல மாதங்களாக மூடியே கிடக்கிறது. இங்கு கழிவறை இல்லாததால் பஸ் ஏற வரும் பயணிகள் மற்றும் அந்தப்பகுதியில் கடையில் வேலை செய்து வரும் பெண்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே மூடிக்கிடக்கும் இந்த கழிவறையை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
லட்சுமி, ஊட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
கோவை 83-வது வார்டுக்கு உட்பட்ட சலீவன் வீதி பகுதியில் குப்பைகள் அள்ளப்படாமல் மலைபோன்று ரோடு முழுவதும் குவிந்து கிடக்கிறது. அருகில் நூலகம் மற்றும் பல குடியிருப்புகள் உள்ளன. இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் நீடித்து வருகிறது. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
தினேஷ், கோவை.
முட்புதர்கள் ஆக்கிரமிப்பு
பொள்ளாச்சி திருப்பூர் மெயின் ரோட்டில் செங்குட்டைப் பாளையம் பிரிவில் இருந்து செங்குட்டைப்பாளையம் செல்லும் ரோட்டில் இருபுறமும் முட்புதர்கள் அதிகளவில் படர்ந்து, ஆக்கிரமித்து உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் தெரிவது இல்லை. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த சாலையில் உள்ள முட்புதர்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். .
ராசு, செங்குட்டைப்பாளையம்.
சுகாதார சீர்கேடு
கோவை ரங்கேகவுண்டர் வீதி, கடைவீதி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. அங்கு குவிந்து கிடக்கும் குப்பை களால் அதிகளவில் துர்நாற்றம் வீசுகிறது. அத்துடன் தெருநாய்கள் அந்த குப்பைகளை ரோட்டில் இழுத்து போடுவதால், விபத்து ஏற்படும் நிலை நீடித்து வருகிறது. எனவே இங்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் குப்பைகளை அகற்ற வேண்டும்.
கண்ணன், கோவை.
ஒளிராத மின்விளக்கு
கோவை கணபதி சத்தி ரோட்டில் மூர் மார்க்கெட் பகுதியில இரவு நேரத்தில் மின்விளக்கு ஒளிருவது இல்லை. இதனால் இரவில் இருள் சூழ்ந்து இருப்பதால் அங்கு விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே பழுதாகி கிடக்கும் அந்த மின்விளக்கை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
சண்முகம், கணபதி.
ஓட்டைவிழுந்த குப்பை தொட்டி
தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட போளுவாம்பட்டி சாலையில் குப்பை தொட்டி வைக்கப்பட்டு உள்ளது. இந்த குப்பை தொட்டி ஆங்காங்கே ஓட்டை விழுந்து இருப்பதால் அதில் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் கீழே விழுந்து காற்று வீசும்போது சாலைக்கு வந்து விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே ஓட்டை விழுந்த குப்பை தொட்டியை மாற்ற வேண்டும்.
சந்தோஷ், தொண்டாமுத்தூர்.
தினத்தந்தி செய்தி எதிரொலி:
முட்புதர்கள் அகற்றப்பட்டது
கோவை அருகே உள்ள பள்ளபாளையம் நூலகத்தில் முட்புதர்கள் ஆக்கிரமித்து புதர்மண்டி கிடந்தது. இதனால் அங்கு சென்று வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்பயனாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
மணியரசு, கோவை.
அதிவேகத்தில் செல்லும் பஸ்கள்
கோவை மாநகர பகுதியில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிவேகத்தில் சென்று வருகின்றன. மாநகர பகுதியில் குறிப்பிட்ட வேகத்தில்தான் இயக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் அதையும் மீறி வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து அதிவேகமாக செல்லும் தனியார் பஸ்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
நாகராஜ், கோவை.
கால்நடைகள் தொல்லை
கோவை செல்வபுரம் செல்லும் சாலையில் கால்நடைகள் தொல்லை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக குதிரைகள், மாடுகள் சாலையின் நடுவே ஜாலியாக உலா வருகிறது. அவை அடிக்கடி சண்டைபோட்டு மிரளுவதால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு கால்நடைகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.
கணேசன், செல்வபுரம்.