குடிமங்கலம் அருகே சுங்காரமடக்கு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்
குடிமங்கலம் அருகே சுங்காரமடக்கு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்
குடிமங்கலம்,
குடிமங்கலம் அருகே சுங்காரமடக்கு பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில நெடுஞ்சாலை
பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தாராபுரம்-பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு தினமும் காய்கறி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதுதவிர குடிமங்கலம் பகுதியில் காற்றாலைகள் அதிக அளவில் நிறுவப்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
குடிமங்கலம் அருகே சுங்காரமடக்கு பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட தரைப்பாலம் உள்ளது.பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்புச்சுவர் எதுவும் இல்லாமல் காணப்படுகிறது மேலும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இரவு நேரங்களில் பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
உயர்மட்ட பாலம்
பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை பூசாரிப்பட்டி பகுதியிலிருந்து விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலை 7 மீட்டர் அகலத்தில் இருந்து 2.5 மீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இருவழிப்பாதை பலவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ள நிலையில் கனரகவாகனங்கள் சரக்கு வாகனங்களின் போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் கனரக வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. குடிமங்கலம் அருகே சுங்காரமடக்கு பகுதியில் உப்பாறு ஓடையின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.