சாகுபடி செய்ய நிலத்தை தயார் செய்யும் பணி
சாகுபடி செய்ய நிலத்தை தயார் செய்யும் பணி;
கோத்தகிரி
கோத்தகிரியில், இயற்கை உரத்தை பயன்படுத்தி பயிர் சாகுபடி செய்ய நிலத்தை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மலை காய்கறிகள்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைகாய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் முட்டைக்கோஸ், காலி பிளவர், உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், நூல்கோல், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலை காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக, அறுவடை செய்த விளை நிலங்களில் மீண்டும் விவசாயம் செய்யாமலே, விவசாயிகள் தரிசாக விட்டு வைத்திருந்தனர்.
இயற்கை உரம் போடும் பணி
இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் மீண்டும் பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக விளை நிலங்களைத் தயார் செய்ய தொடங்கி உள்ளனர். எனவே மண்ணை உழுது பதப்படுத்தி வருவதுடன், விளைநிலங்களில், இயற்கை உரங்களை மண்ணுடன் கலந்து மீண்டும் விவசாயம் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோத்தகிரி கதவுத்தொரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:-
பலத்த மழை காரணமாக காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும் என்பதால் கடந்த ஒரு மாதமாக விவசாயம் செய்யாமல் இருந்தோம். இந்த நிலையில் அடுத்த மாதம் முதல் மீண்டும் விவசாயம் செய்ய உள்ளதால், மண் வளத்தை பாதுகாக்க ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கை சாண உரங்களை பயன்படுத்தி வருகிறோம்.
விளைச்சல் அதிகம்
இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்தால் காய்கறி விளைச்சல் அதிகமாக இருக்கிறது. அதுபோன்று செலவும் அதிகரிக்கிறது. ஒரு லாரி சாண உரம் ரூ.30 ஆயிரம் ஆகிறது. ஒரு ஏக்கருக்கு 3 லாரி சாண உரம் தேவைப்படும். தோட்டக்கலைத்துறை சார்பில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க மானியத்துடன் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.