கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்ற துணிகர சம்பவத்தால் பரபரப்பு

கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்ற துணிகர சம்பவத்தால் பரபரப்பு;

Update: 2021-12-13 14:38 GMT
வீரபாண்டி, 
திருப்பூர் பகுதியில் அதிகாலையில் நடந்து சென்றவரை கத்தியால் தாக்கி செல்போனை பறித்து சென்ற துணிகர சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல் அடுத்தடுத்த சம்பவங்களில் ஈடுபட்ட 2 மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கத்தியால் குத்தி செல்போன் பறிப்பு
திருப்பூர் மங்கலம் சாலை, கே.வி.ஆர். தோட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ஜெகநாதன் (வயது 30). சாயப்பட்டறை ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வேலை முடிந்து சுண்டமெடு பகுதியிலிருந்து கே.வி.ஆர். தோட்டம் வழியாக நடந்து சென்றார்.
அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் திடீரென்று ஜெகநாதனை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால் ஜெகநாதன் செல்போனை தர மறுத்ததுடன் சத்தம் போட்டார். உடனே மர்ம ஆசாமிகள் கத்தியால் அவரை குத்திவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். 
இதில் காயம் அடைந்த ஜெகநாதனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மத்திய காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். 
கத்தியால் வெட்டினான்
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரையை சேர்ந்தவர் மனோகர் (வயது 55). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை 5½ மணி அளவில் நடைபயிற்சிக்காக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் ஹெல்மெட் அணிந்து வந்தனர். இவர்களில் பின்னால் அமர்ந்து வந்த ஆசாமி, மனோகரிடம் செல்போனை பறிக்க முயன்றான். ஆனால் மனோகர் சுதாரித்துக்கொண்டு ஓட, அந்த ஆசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டினான். இதில் மனோகருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அவர் சத்தம் போட்டபடி ஓட, மர்ம ஆசாமி துரத்திச்சென்றான்.
இதை கவனித்த அங்கிருந்தவர்கள் கீழே கிடந்த கற்களை எடுத்து மர்ம ஆசாமிகள் மீது வீசினார்கள். இதனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். பின்னர் காயமடைந்த மனோகரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அடுத்தடுத்து சம்பவம்
இதுபோல் அதே மர்ம ஆசாமிகள் நேற்று காலை ஊத்துக்குளி ரோடு முதல் ரெயில்வே கேட்டில் ஒரு பெண்ணிடமும், கருமாரம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் ஒரு பெண்ணிடமும் செல்போனை பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். 
காலை 6 மணி அளவில் திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு பகுதியில் நடந்து சென்ற ஒருவரிடமும் செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். 
இந்த சம்பவங்களில் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க ஒரே ஆசாமிகள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதிகாலை நேரத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம ஆசாமிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்