கோவை
ரேஷன் அரிசி கேரள மாநிலத்துக்கு கடத்தப்படுவதை தடுக்க மதுக்கரை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் அதிகாரிகள் வேலந்தாவளம், குமிட்டிபதி ஆகிய பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக அதிகாலை 3 மணியளவில் வேகமாக வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்த முயன்றனர்.
ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது.
உடனே அதிகாரிகள் விரட்டி சென்று ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில்அந்த ஆட்டோவில் 30 கிலோ எடையுள்ள 25 மூட்டைகளில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும்,
அதை கேரளா வுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஆட்டோவை ஓட்டி வந்த திருமறைநகரை சேர்ந்த பீட்டர் (வயது 56),
பிச்சனூர் அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்த வள்ளியம்மாள் (48) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, 700 கிலோ ரேஷன் அரிசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரையும் மதுக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.