தூத்துக்குடியில் 5 கொள்ளையர்கள் சிக்கினர்
தூத்துக்குடியில் கூட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்;
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கூட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய 5 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5 பேர்
தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில், தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கால்டுவெல் காலனியில் உள்ள பூங்காவில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், அவர்கள் கால்டுவெல்காலனியை சேர்ந்த ராமசாமி மகன் மதன்குமார் (23), கணேசபுரத்தை சேர்ந்த யாக்கோபு மகன் இசக்கிமுத்து (20), கருணாநிதிநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் அந்தோணி ராஜ் (19), பிரையண்ட்நகரை சேர்ந்த ராமர் மகன் பாலகணேஷ் (23), கால்டுவெல்காலனியை சேர்ந்த கனி மகன் முத்துராஜ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள், பிரபல கொள்ளையர்கள் என்றும், கூட்டு கொள்ளையில் ஈடுபட சதித் திட்டம் தீட்டியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.