தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தேனி கோர்ட்டு தீர்ப்பு
தொழிலாளியை கத்தியால் குத்திய வழக்கில் விவசாயிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
தேனி:
தேவாரம் கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்த பின்னியப்பன் மகன் தங்கபாண்டி (வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய உறவினர் நாகராஜிக்கும், அதே ஊரில் விவசாயம் செய்து வரும் கண்ணன் (31) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நாகராஜிடம், கண்ணன் தகராறு செய்தார். அப்போது கண்ணன் மறைத்து வைத்து இருந்த கத்தியால் நாகராஜை குத்த முயன்றார். அதை தங்கபாண்டி தடுக்க முயன்றபோது அவரை கண்ணன் கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு தேனி சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி சுந்தரி நேற்று தீர்ப்பளித்தார். அதில், கண்ணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.