சீர்மரபினர் சான்றிதழ் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

சீர்மரபினர் சான்றிதழ் வழங்கக்கோரி தேனி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறவர் சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2021-12-13 11:30 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர். சில அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு கொடுத்தனர்.
அதன்படி தேனி மாவட்ட மறவர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் முத்துக்குமார் தலைமையில் நூற்றுக்கணக்கானோர் தேனி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகில் இருந்து கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை அவர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி மாவட்டத்தில் மறவர் சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அரசாணைப்படி சீர்மரபினர் மற்றும் சீர்மரபினர் பழங்குடியினர் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கலெக்டரிடம் இதுதொடர்பான கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
டோலியில் மனுக்கள் மூட்டை
சீர்மரபினர் நலச்சங்க மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுக்களின் நகல்களை மூட்டை கட்டி அந்த மூட்டையை டோலியாக தூக்கி வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் மதுபான ஆலைகளை மூட வேண்டும், இதுவரை அளித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மேலும் அவர்கள், "பூரண மதுவிலக்கு, முதியோர் உதவித்தொகை, சீர்மரபினர் சான்றிதழ் மற்றும் மக்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அந்த மனுக்களின் நகல்களை மூட்டை கட்டி எடுத்து வந்தோம்" என்றனர்.
அதுபோல், இந்து எழுச்சி முன்னணி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பொம்மையகவுண்டன்பட்டி பகுதியில் அனுமதியின்றி கிறிஸ்தவ சபை அமைப்பதை தடுக்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
ஜல்லிக்கட்டு 
பெரியகுளம் கீழவடகரை காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் இதுதொடர்பாக கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
பழனிசெட்டிபட்டியை சேர்ந்த பனைமரம் ஏறும் தொழிலாளி கருப்பையா என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "நானும் எனது குடும்பத்தினரும் பனை மரம் ஏறும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வருகிறோம். எங்கள் ஊரில் சுமார் 600 பனை மரங்களை குத்தகைக்கு எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறேன். அந்த பனை மரங்களில் இருந்து பதநீர் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
தமிழ்நாடு நாட்டுமாடு நலச்சங்க செயலாளர் ஆதி தலைமையில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில், "தேனி அருகே கோட்டூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர். கண்டமனூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "கண்டமனூர் 5-வது வார்டு கிழக்கு தெருவில் 80 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 30 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இப்பகுதியில் வசிக்கும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
தற்கொலைக்கு அனுமதி கேட்ட தம்பதி
போடி அணைக்கரைப்பட்டியை சேர்ந்த அழகுமலை, அவருடைய மனைவி ஞானமணி ஆகிய இருவரும் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், "நாங்கள் கரும்பு விவசாயம் செய்து அதில் இருந்து வெல்லம் தயாரித்து பிழைத்து வந்தோம். குடும்ப சூழல் காரணமாக ஒருவரிடம் ரூ.4½ லட்சம் கடன் வாங்கினோம். வட்டி கட்டி வந்த நிலையில், 2 தவணையாக ரூ.5 லட்சம் கொடுத்தோம். தற்போது அவர் பணம் வாங்கவில்லை என்கிறார். மேலும் அவர் கேட்கும் பணத்தை கொடுக்க முயன்ற போது, பணத்துக்கு பதில் நிலத்தை எழுதி தருமாறு கூறியதோடு அவரும் சிலரும் எங்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது எங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
ஜெயமங்கலத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவர் கொடுத்த மனுவில், "ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஏழை மக்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு இடம் கேட்டபோது எங்கள் குடும்பத்தினர் அரசுக்கு இடம் தானமாக கொடுத்தனர். அதற்கு பதில் எங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், 17 ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. இதுதொடர்பாக 72-வது முறையாக தற்போது மனு கொடுக்கிறேன். எனவே அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மேலும் செய்திகள்