வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வெளிநாட்டு பறவைகள்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கலில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் இனப்பெருக்கத்திற்காக சீனா, இங்கிலாந்து, இத்தாலி, பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெள்ளை அரிவாள் மூக்கன், ஊசிவால் வாத்து, சாம்பல்நிற அரிவாள் மூக்கன், நத்தை கோத்திநாரை உள்ளிட்ட பறவைகள் வந்து செல்கின்றன.
குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்த ஆண்டு பெய்த கனமழையின் காரணமாக வேடந்தாங்கல் ஏரி நிரம்பியது. இதன் காரணமாக பறவைகள் வரத்தும் அதிகரித்தது.
இதனையடுத்து வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வந்து, அரியவகை பறவைகளை கண்டு ரசித்தனர்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் வேடந்தாங்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அவர்கள் தங்கள் செல்போனில் பறவைகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.