அம்மாபேட்டை அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
அம்மாபேட்டை அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாபேட்டை
அம்மாபேட்டை அருகே குடும்பம் நடத்த மனைவி வராததால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தாய் வீட்டில் இருந்தார்
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள சித்தார் குறிச்சி ரோட்டில் வசித்தவர் தாமஸ் (வயது 27). கூலி தொழிலாளி. சேலம் மாவட்டம் நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்சா மேரி. இவருக்கும், தாமசுக்கும் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் அல்போன்சா மேரி கர்ப்பமானார். இதைத்தொடர்ந்து பிரசவத்துக்காக நெடுங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டு்க்கு சென்றார்.
அங்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்தது. ஆனால் வெகு நாட்களாகியும் அல்போன்சா மேரி சித்தாருக்கு வராமல் தாய் வீட்டிலேயே இருந்து வந்ததாக தெரிகிறது.
தற்கொலை
இதையடுத்து தாமஸ் நெடுங்குளத்துக்கு சென்று அல்போன்சா மேரியை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்துள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தாமஸ் மனமுடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது விஷம் குடித்து விட்டார். இதனால் மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் காலை இறந்தார்.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.