மாயமான இளம்பெண் கோவையில் கள்ளக்காதலனுடன் மீட்பு
குமாரபுரம் அருகே மாயமான இளம்பெண் கோவையில் கள்ளக்காதலனுடன் மீட்கப்பட்டார். அவரை கணவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
பத்மநாபபுரம்:
குமாரபுரம் அருகே மாயமான இளம்பெண் கோவையில் கள்ளக்காதலனுடன் மீட்கப்பட்டார். அவரை கணவர் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
2 குழந்தைகளின் தாய்
குமாரபுரம் அருகே உள்ள பட்டன்விளையை சேர்ந்த 43 வயதுடைய தொழிலாளிக்கும், தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் தொழிலாளி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த அவரது மனைவியை காணவில்லை. இதனால், பதற்றம் அடைந்த அவர் கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இளம்பெண்ணுக்கும், கணவரின் நண்பருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலனை மறக்க முடியாத இளம்பெண் அவருடன் சென்றது தெரிய வந்தது.
கோவையில் மீட்பு
இதனையடுத்து போலீசார் இருவரின் செல்போன் எண்ணை கண்காணித்து தேடி வந்தனர். அப்போது, அவர்கள் கோவையில் தங்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கோவைக்கு சென்று கள்ளக்காதலனுடன் தங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டு கொற்றிகோடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தொடர்ந்து இளம்பெண்ணின் கணவரையும், பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கள்ளக்காதலால் வீட்டை விட்டு வெளியேறிய மனைவியை ஏற்று கொள்ள கணவர் மறுத்தார். இதனால் இளம்பெண்ணுக்கு போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கொற்றிகோடு போலீஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.