வீட்டில் பதுக்கப்பட்ட 103 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்

வீட்டில் பதுக்கப்பட்ட 103 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-12-12 20:09 GMT
பெரம்பலூர்:

போதை பொருட்கள் பதுக்கல்
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்தல், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தல் போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி எச்சரித்திருந்தார். இந்நிலையில் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனைக்காக பெரம்பலூரில் ஜமாலியா நகரில் உள்ள ஒரு வீட்டில் ஒருவர் பதுக்கி வைத்திருப்பதாக போதை பொருள் விற்பனை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். இதில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான 103 கிலோ போதை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் ராஜஸ்தான் மாநிலம், ஜாலூர் மாவட்டம், நியர் பட்வர் பவன் பகுதியை சேர்ந்த கான்சிங் (வயது 39) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கான்சிங்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் போதை பொருட்கள் விற்பனைக்கு பயன்படுத்தி வந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்