கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பீல்வாடி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் ஷாலினி(வயது 21). இவர் அரசு கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து வந்தார். ஷாலினிக்கு தீராத வயிற்று வலி இருந்ததாகவும், மருத்துவமனையில் காண்பித்தும் குணமாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் வயிற்று வலி தாங்க முடியாமல் நேற்று முன்தினம் இரவு வீட்டில் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து ஷாலினி குடித்துள்ளார்.
இதையறிந்த உறவினர்கள் ஷாலினியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஷாலினி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து ஷாலினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின்பேரில் மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.