மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுமா?
மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் மானியம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.;
பெங்களூரு:
மின்சார வாகனங்கள்
இந்தியாவில் காற்று மாசுபடுவதை தடுக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. சார்ஜர் செய்து இயக்கப்படும் இந்த வாகனங்களை வாங்குவதில் பொதுமக்கள் இடையே ஆர்வம் அதிகரித்து உள்ளது. இந்த வாகனங்களை வாங்குவதால் பெட்ரோல், டீசல் விலை பற்றி வாகன ஓட்டிகள் கவலைப்படாமல் இருக்கலாம். இந்த நிலையில் சில மாநிலங்களில் மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடகத்தில் இதுவரை மானியம் எதுவும் வழங்கவில்லை.
தலைநகர் டெல்லியில் மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு மானிய தொகையாக அரசு ரூ.30 ஆயிரம் கொடுத்து வருகிறது.
மானியம் வழங்க வேண்டும்
மராட்டியத்தில் ரூ.25 ஆயிரம், மேகலயா, அசாம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ரூ.20 ஆயிரம், ராஜஸ்தானில் ரூ.10 ஆயிரம், குஜராத்தில் ரூ.20 ஆயிரம், ஒடிசாவில் ரூ.5 ஆயிரம் அரசு சார்பில் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. பிற மாநிலங்கள் இந்த மின்சார வாகனங்களை விளம்பரப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் கர்நாடகம் மட்டும் இந்த துறையின் முதலீட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
இதனால் மின்சார வாகனங்களை வாங்குபவர்கள் அரசு தங்களுக்கு மானியம் வழங்குவது இல்லை என்று வருத்தம் தெரிவித்து உள்ளனர். இதனை போக்க கர்நாடக அரசும் மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது. இந்த மின்சார வாகனங்களுக்கு கர்நாடகத்தில் சாலை வரி கிடையாது என்பதே ஆறுதலான விஷயமாக உள்ளது. இந்தியாவில் 8.70 லட்சம் மின்சார வாகனங்கள் ஓடுவதாக தெரிவித்து உள்ள மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி கர்நாடகத்தில் மட்டும் 72 ஆயிரத்து 544 வாகனங்கள் ஓடுவதாக நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.