சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் மதமாற்ற தடை சட்டம் இயற்றப்படும் - பசவராஜ் பொம்மை தகவல்
கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் இந்த குளிர்கால கூட்டத்தொடரிலேயே இயற்றப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு:
தொந்தரவு கிடையாது
நாட்டில் இந்து, முஸ்லிம், கிறிஸ்து, சீக்கியர் என்று அனைத்து மதங்களுக்கு அரசியல் சாசனப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அத்தகைய மதங்களை சேர்ந்தவர்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. அவரவர்களின் மத நம்பிக்கையின்படி செயல்பட எந்த சிக்கலும் இல்லை. கிறிஸ்துவ மத தலைவர்களுடன் நான் ஆலோசனை நடத்தினேன். கிறிஸ்துவ மக்களுக்கு எந்த தொந்தரவும் கிடையாது. ஆனால் ஏழ்மையை பயன்படுத்தி அந்த மக்களை மதமாற்றம் செய்வது தவறு. ஆசைகளை காட்டி மதம் மாற்றுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இத்தகைய கட்டாய மதமாற்றங்களை தடுக்கும் நோக்கத்தில் நாங்கள் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்கிறோம். இதன் மூலம் குடும்பங்களில் மக்கள் சந்திக்கும் தொந்தரவுகள் தடுக்கப்படும்.
இந்த மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்பு அதுபற்றி ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை அரசுக்கு கிடைக்கும். அந்த அறிக்கையை மந்திரிசபை கூட்டத்தில் வைத்து விவாதிப்போம். அதன் பிறகே சட்டசபை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் அந்த அறிக்கை கிடைக்க வாய்ப்பு உள்ளது. அது இந்த கூட்டத்திலேயே தாக்கல் செய்யப்படலாம்.
குளிர்கால கூட்டத்தொடர்
சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் நாளை (அதாவது இன்று) முதல் பெலகாவி சுவர்ண சவுதாவில் தொடங்குகிறது. இதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த கூட்டத்தில் வட கர்நாடக பிரச்சினைகள் குறித்து விவாதிக்க முன்னுரிமை அளிப்போம். பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது குறித்து அவரே கூறியுள்ளார். இதில் தவறு செய்தவர்களை கண்டுபிடிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
டுவிட்டர் கணக்குகள் முடக்கப்படுவது ஆங்காங்கே நடக்கிறது. தொழில்நுட்ப உதவியால் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள தகவல்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். கர்நாடகத்தில் மரபணு பகுப்பாய் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
எதிர்க்கட்சிகள்-கிறிஸ்தவ அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே இயற்றப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சூசகமாக கூறியுள்ளார். பெங்களூருவில் கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் பா.ஜனதா உறுப்பினர் கூளிகட்டி சேகர் எம்.எல்.ஏ., தனது தாயாரை மூளைச்சலவை செய்து மதமாற்றம் செய்துவிட்டனர் என்றும், அதனால் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.