மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை
நெல்லையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகை ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.;
நெல்லை:
நெல்லையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மல்லிகை ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
தொடர் மழை
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக வடகிழக்கு பருவமழை பெய்தது. இந்த ஆண்டு மற்ற ஆண்டுகளை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால் பல அணைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழை காரணமாக பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பூக்களை பறிக்கவும் முடிவதில்லை. எனவே நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) கார்த்திகை மாதத்தின் கடைசி திருமண முகூர்த்த நாள் ஆகும். மேலும் நேற்று அம்மன் கோவில்களில் சூறை விழா நடந்தது. இதையொட்டி பூ மாலைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டது. விலையும் உயர்ந்து விற்பனை ஆனது.
மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரம்
நெல்லை பாளையங்கோட்டை பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஒரு கிலோ கேந்தி சாதாரண நாட்களில் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும். தற்போது ஒரு கிலோ விலை ரூ.200 ஆக உயர்ந்து உள்ளது. ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட கோழிப்பூ, வாடாமல்லி ஆகியவை தற்போது ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொடி சம்பங்கி ஒரு கிலோ ரூ.600-க்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட ரப்பர் சம்பங்கி ரூ.500-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த பூக்கள் மூன்று மடங்கு விலை உயர்வை இப்போது சந்தித்துள்ளன.
மாலைகள்
ஒரு கிலோ பிச்சி ரூ.1,750-க்கும், கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்துக்கும், பன்னீர் ரூ.300-க்கும் விற்பனையானது. அரளிப்பூக்கள் ஒரு கிலோ பாக்கெட் ரூ.500-க்கும், நந்தியாவட்டை 700-க்கும், ரோஜாப்பூ கிலோ ரூ.400-க்கும், மணக்காத மல்லிகை ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
பாளையங்கோட்டை பூ மார்க்கெட்டில் முன்பு ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்ட மாலைகள் தற்போது ரூ.80-க்கு விற்பனையானது. ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட மாலைகள் ரூ.250-க்கும், ரூ.70-க்கு விற்கப்பட்ட ரோஜா மாலை ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காரணம் என்ன?
இந்த விலை உயர்வு குறித்து பாளையங்கோட்டை பூ மார்க்கெட் வியாபாரி சப்பாணிமுத்து கூறுகையில், ‘தொடர் மழை காரணமாக பூ விளைச்சல் இல்லாததால் பூ விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. இதனால் சில்லறைக்கு பூ விற்பனை செய்ய எங்களுக்கு கடினமாக உள்ளது.
முகூர்த்த நாள் மற்றும் சூறை, கார்த்திகை மாத சோமவாரம் உள்ளிட்டவை காரணமாகவும் பூ விலை உயர்ந்துள்ளது. இதனால் மாலைகள் விலையும் அதிகரித்து உள்ளது’ என்றார்.