ஒமைக்ரான் பாதித்த டாக்டருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு
பெங்களூருவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளான டாக்டருடன் தொடர்பில் இருந்த 10 பேருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது தொியவந்துள்ளது. இன்னும் 10 பேரின் பரிசோதனை அறிக்கைக்காக அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
பெங்களூரு:
டாக்டருக்கு ஒமைக்ரான்
நாட்டிலேயே முதல் முறையாக பெங்களூருவில் தான் 2 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. அவர்களில் ஒருவர் தென் ஆப்பிரிக்கா நாட்டுக்கு சென்று விட்டார். மற்றொருவர், பெங்களூருவை சேர்ந்த டாக்டர் ஆவார். அவருக்கு பவுரிங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த டாக்டரின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்துள்ளது.
இதற்கிடையில், ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளான டாக்டருடன், அவரது குழந்தைகள் 2 பேர் உள்பட 10 பேர் நேரடி தொடர்பில் இருந்திருந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருந்தது. இதையடுத்து, அவர்கள் 10 பேரும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்களா? என்பதை கண்டறிய, அவர்களது சளி மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
10 பேருக்கு டெல்டா வைரஸ்
இந்த நிலையில், டாக்டருடன் நேரடியாக தொடர்பில் இருந்த 10 பேருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் 10 பேருக்கும் டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்காக 10 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்தவருடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என இன்னும் 10 பேரின் பரிசோதனை அறிக்கை வர வேண்டிய இருப்பதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி பாலசுந்தர் தெரிவித்துள்ளார்.