பிபின் ராவத் மரணத்தை கொண்டாடும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து - தனியார் மருத்துவமனை ஊழியர் கைது
முப்படை தளபதியாக இருந்த பிபின் ராவத்தின் மரணத்தை கொண்டாடும் விதமாக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட தனியார் மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
பெங்களூரு:
3 பேர் மீது வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படையின் தளபதியாக இருந்த பிபின் ராவத், அவரது மனைவி உயிர் இழந்திருந்தனர். இதுதவிர 11 வீரர்களும் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்திருந்தனர். இந்த நிலையில், பிபின் ராவத்தின் மரணத்தை கொண்டாடும் விதமாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு இருந்தார்கள். பிபின் ராவத்தின் மரணத்தை கொண்டாடி கருத்து பதிவிட்ட சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யும்படி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தார்கள்.
இதையடுத்து, பெங்களூரு போலீஸ் கமிஷனர் கமல்பந்த் உத்தரவின்பேரில் விதானசவுதா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், பிபின் ராவத்தின் மரணத்தை கொண்டாடும் விதமாக சீனிவாஸ், சுப்புராவ் ரவிக்குமார், வசந்த்குமார் ஆகிய 3 பேரும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தார்கள்.
மருத்துவமனை ஊழியர் கைது
இந்த நிலையில், விதானசவுதா போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பிபின் ராவத்தின் மரணத்தை கொண்டாடும் விதமாக கருத்து பதிவிட்டு இருந்த வசந்த்குமார் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். பெங்களூருவில் ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷியனாக வசந்த்குமார் வேலை பார்த்து வந்துள்ளார்.
பிபின் ராவத் மரணம் அடைந்ததும், அவரையும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் தனது முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் வசந்த்குமார் கருத்து பதிவிட்டு இருந்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுப்புராவ் ரவிக்குமார், சீனிவாசை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.