மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்
நெல்லை டவுனில் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் மழைநீருடன், சாக்கடை நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நெல்லை டவுன் அப்பர்தெரு, சுந்தரர் தெரு, மாணிக்கவாசகர் தெரு, பிட்டாபுரத்தி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுகாதார சீர்கேடு அதிகளவில் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகளவில் உள்ளது. இதை தொடர்ந்து அந்த பகுதிக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக நேற்று மாநகராட்சி அதிகாரிகள் சென்று ஆய்வு நடத்தினார்கள்.
அப்போது ஆய்வு செய்ய சென்ற மாநகராட்சி அதிகாரிகளை, அந்த பகுதி பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் நெல்லை மாநகர நல அலுவலர் டாக்டர் ராஜேந்திரன் விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மாநகராட்சி சார்பில் சுகாதார பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றார். மேலும் கழிவுநீர் அகற்றப்படும், கொசு மருந்து அடிக்கப்படும். சாக்கடை உடனடியாக அள்ளப்படும். பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.